குறள் (Kural) - 396

குறள் (Kural) 396
குறள் #396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

Tamil Transliteration
Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu.

மு.வரதராசனார்

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

கலைஞர்

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பரிமேலழகர்

மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணவில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; மாந்தர்க்குக் கற்ற அனைத்து அறிவு ஊறும் -அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும். மணற்கிடங்கு சிறிதே தோண்டினால் ஊறும் நீர் போதாது. சற்று ஆழமாகத் தோண்டினாற் போதிய நீர் ஊறும். அதன்மேலும் தோண்டத் தோண்ட ஊறுமாதலால் , அவரவர் தேவைக்குத் தக்கவாறு தோண்டிக் கொள்ளல்வேண்டும். அதுபோல் , கல்வியும் சிறிது கற்ற அளவில் அறிவு நிரம்பாது; பேரளவு கற்றால் வேண்டிய அறிவு அமையும். அதன்மேலுங் கற்பது அவரவர் தேவையையும் விருப்பத்தையும் ஆற்றலையும் ஓய்வையும் வாழ்நாளளவையும் பொறுத்ததாம். இக்குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை. "நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் ணுண்மை யறிவே மிகும்." (373) என்னுங் குறளிற்கூறியது அறிவு பயன்படும் வகைபற்றிய தென்றும், இங்குக் கூறியது அறிவு வளரும் வகை பற்றிய தென்றும், வேறுபாடறிக.

மணக்குடவர்

அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்வி (Kalvi)