குறள் (Kural) - 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பொருள்
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
Tamil Transliteration
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil.
மு.வரதராசனார்
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
கலைஞர்
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
பரிமேலழகர்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே- யாரொடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்பேமென்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே; புலவர் தொழில் - சிறந்த கல்வியுடையார் செயலாம். கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால், அவரை விட்டுப் பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம். ஏகாரம் தேற்றம்.
மணக்குடவர்
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
புலியூர்க் கேசிகன்
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கல்வி (Kalvi) |