குறள் (Kural) - 393

குறள் (Kural) 393
குறள் #393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

Tamil Transliteration
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar.

மு.வரதராசனார்

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா

ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

கலைஞர்

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

பரிமேலழகர்

கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர் (தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான் , பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கண் உடையர் என்பவர் கற்றோர் -கண்ணுடைய வரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் கற்றோரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர்- மற்றக் கல்லாதவரோ வெனின் தம் முகத்தில் இரண்டு கண்களையல்ல, புண்களையே உடையர். நெட்டிடைப் பொருள்களையும் முக்காலச் செய்திகளையும் நூல் வாயிலாக அறியும் அறிவுக்கண்ணுடைய வரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி மாசுபடிந்து உறுத்துவதும் நோயுற்றுத் துன்பஞ் செய்வதுமான ஊன் கண்ணை மட்டு முடையவரைப் 'புண்ணுடையர்' என்றுங் கூறினார்.கற்றார் கண்போன்றே கல்லார் கண்ணும் ஏட்டைக்கண்டும் அதிலுள்ள எழுத்தைப்படிக்கத் தெரியாமையால் , அது விழிகண்குருடு போல்வது மட்டுமன்றி நோவுந்தருவ தென்று நன்மையின்மையும் தீமையுண்மையும் ஒருங்கு கூறி, கற்றாருயர்வும் கல்லாரிழிவும் விளக்கிக் காட்டினார்.

மணக்குடவர்

கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

புலியூர்க் கேசிகன்

‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்வி (Kalvi)