குறள் (Kural) - 392

குறள் (Kural) 392
குறள் #392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

பொருள்
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku.

மு.வரதராசனார்

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

கலைஞர்

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். (எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன.அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்- மாந்தர் பொதுவாக இலக்கமென்று சொல்லுவதும் மற்ற எழுத்தென்று சொல்லுவதுமான இருவகை நூற்கலைகளையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப- இவ்வுலகிற் சிறப்பாக வாழவிரும்பும் மக்களுயிர்க்குக் கண்ணென்று சொல்லுவர் அறிந்தோர். அறம் முதலிய நாற்பொருளாயமையும் எல்லாக்கலைகளும் அறிவியல்களும், எண்ணூலும் இலக்கியமும் என இருவகுப்பாக வகுக்கப்பெறும். எண்ணூலென்பது கணக்கும் (Arithmetic) கணிதமும் (Mathematics). அதுசிறப்பாக எண்களால் அறியப்பெறும் இலக்கியமென்பது மற்றெல்லா அறிவுத்துறைகளும் ஆம். அது பெரும்பாலும் எழுத்தை உறுப்பாகக் கொண்ட சொற்களால் அறியப்பெறும். இவ்விருவகை நூல்வகுப்புக்களும், எல்லாப்பொருள்களையும் அறிதற்குக் கண்போல் அல்லது கண்ணாடிபோல் உதவுதலாற் கண்ணெனப்பட்டன. இவை எழுதப்பட்ட வடிவிற் கட்புலன் வாயிலாகவும் அறியப்படும். கட்புலவடிவில் இலக்கம் (numerical figure) என்னும் வரிவடிவு எண்ணூலையும்; எழுத்து (character) என்னும் வரிவடிவு இலக்கியத்தையும், வேறுபடுத்திக்காட்டும். நூல்வாயிலாகப் பொருள்களை உண்மையாகக் கண்டறிவது. அகக்கண்ணேயாயினும், அதற்குக் கண்ணாடிபோல் உதவுங்கருவித் தன்மை நோக்கி இருவகை நூல்களும் கண்ணெனச் சார்த்திக்கூறப் பட்டன. இதை, குருடர்க்கும் முதியோர்க்கும் கண்ணுங்காலும் போல் உதவுங்கோலைக் கண்ணாகவுங் காலாகவும் கூறியது போற்கொள்க." கோற்கண்ண ளாகுங்குனிந்து "என்பது நாலடியார் (கஎ)."முக்காலுக் கேகாமுன்" என்றார் காளமேகனார். ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள. என்றிரங்குவது ஒரு பழந்தனியன். ஆயின், எண்ணூல், கணக்கியல் முதலிய கணக்கு நூல்களும் ஏரம்பம் முதலிய கணிதநூல்களும் ஆரியரால் அழிக்கபட்டு விட்டன என்பதே, ஆராய்ச்சியாளர் கருத்தாம். 'என்ப' என்னும் மூன்றனுள், முன்னையவிரண்டும் அஃறிணைப் பன்மைப்பெயர்; பின்னது உயர்திணைப்பன்மைவினை. 'வாழ்தல்' என்பதை "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்பதிற் போலக் கொள்க. "எண்ணும் மெழுத்துங் கண்ணெனத்தகும்". (கொன்றை 7) என்பது இக்குறட் சுருக்கமே.

மணக்குடவர்

எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

புலியூர்க் கேசிகன்

‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்வி (Kalvi)