குறள் (Kural) - 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
Tamil Transliteration
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka.
மு.வரதராசனார்
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
கலைஞர்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
பரிமேலழகர்
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்த'லினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
கற்பவை கசடு அறக் கற்க-ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க-அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க. 'கற்பவை' என்றது பொதுக்கல்வியையும் தொழில் தொறும் வேறுபட்ட சிறப்புக்கல்வியையும் குறிக்கும். கசடறக் கற்றலாவது ஐயந்திரிபறத் தெளிவாயறிதல். நிற்றலாவது, பொதுக்கல்விக்கேற்ப அறநெறியிலொழுகுதலும் சிறப்புக்கல்விக்கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ்விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்க வேண்டு மென்றற்கு 'நிற்க' என்றார். 'கற்பவை' என்பது , ஒருவர்தம் உளப்பான்மைக்கும் உடல்நிலைமைக்கும் அகக்கரண வியல்பிற்கும் ஏற்றவாறு ஒரு தொழிலைத் தெரிந்து கொண்டு, அதற்குரியவற்றைக் கற்கவேண்டு மென்பதைக் குறிப்பாயுணர்த்தும்.
மணக்குடவர்
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கல்வி (Kalvi) |