குறள் (Kural) - 1043

குறள் (Kural) 1043
குறள் #1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

Tamil Transliteration
Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai.

மு.வரதராசனார்

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா

இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

கலைஞர்

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

பரிமேலழகர்

நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)

புலியூர்க் கேசிகன்

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (Nalkuravu)