குறள் (Kural) - 1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
பொருள்
 பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
Tamil Transliteration
 Inmai Enavoru  Paavi  Marumaiyum
Immaiyum  Indri  Varum.
மு.வரதராசனார்
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
சாலமன் பாப்பையா
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
கலைஞர்
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
பரிமேலழகர்
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.
புலியூர்க் கேசிகன்
வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்
| பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) | 
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) | 
| அதிகாரம் (Adhigaram) | நல்குரவு (Nalkuravu) |