குறள் (Kural) - 1044

குறள் (Kural) 1044
குறள் #1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

பொருள்
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

Tamil Transliteration
Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum.

மு.வரதராசனார்

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

கலைஞர்

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

பரிமேலழகர்

இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)

புலியூர்க் கேசிகன்

இழிவான செயல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (Nalkuravu)