குறள் (Kural) - 992

குறள் (Kural) 992
குறள் #992
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

Tamil Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum
Panputaimai Ennum Vazhakku.

மு.வரதராசனார்

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

சாலமன் பாப்பையா

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

கலைஞர்

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

பரிமேலழகர்

அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)பண்புடைமை (Panputaimai)