குறள் (Kural) - 993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
பொருள்
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
Tamil Transliteration
Uruppoththal Makkaloppu Andraal Veruththakka
Panpoththal Oppadhaam Oppu.
மு.வரதராசனார்
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
சாலமன் பாப்பையா
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
கலைஞர்
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
பரிமேலழகர்
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.(வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | பண்புடைமை (Panputaimai) |