குறள் (Kural) - 991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
பொருள்
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
Tamil Transliteration
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku.
மு.வரதராசனார்
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
கலைஞர்
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
பரிமேலழகர்
யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.)
புலியூர்க் கேசிகன்
எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | பண்புடைமை (Panputaimai) |