குறள் (Kural) - 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
பொருள்
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
Tamil Transliteration
Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan
Thaangaadhu Manno Porai.
மு.வரதராசனார்
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
சாலமன் பாப்பையா
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
கலைஞர்
சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
பரிமேலழகர்
சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | சான்றாண்மை (Saandraanmai) |