குறள் (Kural) - 986

குறள் (Kural) 986
குறள் #986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொருள்
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.

Tamil Transliteration
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal.

மு.வரதராசனார்

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

சாலமன் பாப்பையா

சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

கலைஞர்

சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.

பரிமேலழகர்

சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (Saandraanmai)