குறள் (Kural) - 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
பொருள்
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
Tamil Transliteration
Aatruvaar Aatral Panidhal Adhusaandror
Maatraarai Maatrum Patai.
மு.வரதராசனார்
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
கலைஞர்
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
பரிமேலழகர்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.)
புலியூர்க் கேசிகன்
ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக் கொள்ளுதல்; சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | சான்றாண்மை (Saandraanmai) |