குறள் (Kural) - 987

குறள் (Kural) 987
குறள் #987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

பொருள்
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.

Tamil Transliteration
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu.

மு.வரதராசனார்

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.

கலைஞர்

தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.

பரிமேலழகர்

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (Saandraanmai)