குறள் (Kural) - 984

குறள் (Kural) 984
குறள் #984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

பொருள்
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

Tamil Transliteration
Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai
Sollaa Nalaththadhu Saalpu.

மு.வரதராசனார்

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

கலைஞர்

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

பரிமேலழகர்

நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (Saandraanmai)