குறள் (Kural) - 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
பொருள்
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
Tamil Transliteration
Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin.
மு.வரதராசனார்
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
கலைஞர்
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
பரிமேலழகர்
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். (குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.)
புலியூர்க் கேசிகன்
முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | மருந்து (Marundhu) |