குறள் (Kural) - 941

குறள் (Kural) 941
குறள் #941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

Tamil Transliteration
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru.

மு.வரதராசனார்

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா

மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

கலைஞர்

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

பரிமேலழகர்

மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம்.காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.)

புலியூர்க் கேசிகன்

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)மருந்து (Marundhu)