குறள் (Kural) - 906

குறள் (Kural) 906
குறள் #906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

பொருள்
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

Tamil Transliteration
Imaiyaarin Vaazhinum Paatilare Illaal
Amaiyaardhol Anju Pavar.

மு.வரதராசனார்

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

கலைஞர்

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

பரிமேலழகர்

இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தன் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெண்வழிச் சேறல் (Penvazhichcheral)