குறள் (Kural) - 905

குறள் (Kural) 905
குறள் #905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

பொருள்
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

Tamil Transliteration
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal.

மு.வரதராசனார்

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

கலைஞர்

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

பரிமேலழகர்

இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)

புலியூர்க் கேசிகன்

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெண்வழிச் சேறல் (Penvazhichcheral)