குறள் (Kural) - 907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
பொருள்
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
Tamil Transliteration
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu.
மு.வரதராசனார்
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
சாலமன் பாப்பையா
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
கலைஞர்
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
பரிமேலழகர்
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)
புலியூர்க் கேசிகன்
தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) |