குறள் (Kural) - 881

குறள் (Kural) 881
குறள் #881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

பொருள்
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

Tamil Transliteration
Nizhalneerum Innaadha Innaa Thamarneerum
Innaavaam Innaa Seyin.

மு.வரதராசனார்

இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

சாலமன் பாப்பையா

நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

கலைஞர்

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

பரிமேலழகர்

நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக.இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)

புலியூர்க் கேசிகன்

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)உட்பகை (Utpakai)