குறள் (Kural) - 880

குறள் (Kural) 880
குறள் #880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பொருள்
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.

Tamil Transliteration
Uyirppa Ularallar Mandra Seyirppavar
Semmal Sidhaikkalaa Thaar.

மு.வரதராசனார்

பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா

நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

கலைஞர்

பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.

பரிமேலழகர்

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal)