குறள் (Kural) - 882

குறள் (Kural) 882
குறள் #882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள்
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Vaalpola Pakaivarai Anjarka Anjuka
Kelpol Pakaivar Thotarpu.

மு.வரதராசனார்

வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா

வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

கலைஞர்

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக. (பகைவர் : ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பறறி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)உட்பகை (Utpakai)