குறள் (Kural) - 879

குறள் (Kural) 879
குறள் #879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பொருள்
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

Tamil Transliteration
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu.

மு.வரதராசனார்

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

சாலமன் பாப்பையா

நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

கலைஞர்

முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

பரிமேலழகர்

முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal)