குறள் (Kural) - 878

குறள் (Kural) 878
குறள் #878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

பொருள்
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.

Tamil Transliteration
Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum
Pakaivarkan Patta Serukku.

மு.வரதராசனார்

செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

சாலமன் பாப்பையா

ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.

கலைஞர்

வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.

பரிமேலழகர்

வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal)