குறள் (Kural) - 877

குறள் (Kural) 877
குறள் #877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

பொருள்
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

Tamil Transliteration
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu.

மு.வரதராசனார்

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

கலைஞர்

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

பரிமேலழகர்

நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal)