குறள் (Kural) - 859

குறள் (Kural) 859
குறள் #859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

பொருள்
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.

Tamil Transliteration
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku.

மு.வரதராசனார்

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

கலைஞர்

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.

பரிமேலழகர்

ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)இகல் (Ikal)