குறள் (Kural) - 858

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
பொருள்
 மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
Tamil Transliteration
 Ikalirku Edhirsaaidhal  Aakkam  Adhanai
Mikalookkin  Ookkumaam  Ketu.
மு.வரதராசனார்
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
சாலமன் பாப்பையா
மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்பதாகும்.
கலைஞர்
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.
பரிமேலழகர்
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். (எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)
புலியூர்க் கேசிகன்
தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்
| பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) | 
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) | 
| அதிகாரம் (Adhigaram) | இகல் (Ikal) |