குறள் (Kural) - 860

குறள் (Kural) 860
குறள் #860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

பொருள்
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

Tamil Transliteration
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.

சாலமன் பாப்பையா

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

கலைஞர்

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

பரிமேலழகர்

இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

‘மாறுபாடு’ என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)இகல் (Ikal)