குறள் (Kural) - 832

குறள் (Kural) 832
குறள் #832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

பொருள்
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

Tamil Transliteration
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai
Kaiyalla Thankat Seyal.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

கலைஞர்

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

பரிமேலழகர்

பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பேதைமை (Pedhaimai)