குறள் (Kural) - 831

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
பொருள்
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
Tamil Transliteration
Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital.
மு.வரதராசனார்
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
சாலமன் பாப்பையா
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
கலைஞர்
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
பரிமேலழகர்
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பேதைமை (Pedhaimai) |