குறள் (Kural) - 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
பொருள்
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
Tamil Transliteration
Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar
Kelaadhu Nattaar Seyin.
மு.வரதராசனார்
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
சாலமன் பாப்பையா
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.
கலைஞர்
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
பரிமேலழகர்
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக, ஒரு செயலைச் செய்துவிட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே, நல்ல நண்பர்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பழைமை (Pazhaimai) |