குறள் (Kural) - 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
பொருள்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Pedhaimai Ondro Perungizhamai Endrunarka
Nodhakka Nattaar Seyin.
மு.வரதராசனார்
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
சாலமன் பாப்பையா
நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.
கலைஞர்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால், அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பழைமை (Pazhaimai) |