குறள் (Kural) - 803

குறள் (Kural) 803
குறள் #803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

பொருள்
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.

Tamil Transliteration
Pazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai
Seydhaangu Amaiyaak Katai.

மு.வரதராசனார்

பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

சாலமன் பாப்பையா

தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.

கலைஞர்

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.

பரிமேலழகர்

கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தன் நண்பரிடத்திலும் அமைந்திராவிட்டால், அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பழைமை (Pazhaimai)