குறள் (Kural) - 802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
பொருள்
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
Tamil Transliteration
Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku
Uppaadhal Saandror Katan.
மு.வரதராசனார்
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
சாலமன் பாப்பையா
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.
கலைஞர்
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
பரிமேலழகர்
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.)
புலியூர்க் கேசிகன்
நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பழைமை (Pazhaimai) |