குறள் (Kural) - 792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
பொருள்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
Tamil Transliteration
Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai
Thaansaam Thuyaram Tharum.
மு.வரதராசனார்
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
சாலமன் பாப்பையா
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
கலைஞர்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
பரிமேலழகர்
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நட்பாராய்தல் (Natpaaraaidhal) |