குறள் (Kural) - 791

குறள் (Kural) 791
குறள் #791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள்
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

Tamil Transliteration
Naataadhu Nattalir Ketillai Nattapin
Veetillai Natpaal Pavarkku.

மு.வரதராசனார்

நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா

விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

கலைஞர்

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

பரிமேலழகர்

நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை. (ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பாராய்தல் (Natpaaraaidhal)