குறள் (Kural) - 793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
பொருள்
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu.
மு.வரதராசனார்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
கலைஞர்
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)
புலியூர்க் கேசிகன்
ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | நட்பாராய்தல் (Natpaaraaidhal) |