குறள் (Kural) - 790

குறள் (Kural) 790
குறள் #790
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்
நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

Tamil Transliteration
Inaiyar Ivaremakku Innamyaam Endru
Punaiyinum Pullennum Natpu.

மு.வரதராசனார்

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

சாலமன் பாப்பையா

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

கலைஞர்

நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

பரிமேலழகர்

இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பு (Natpu)