குறள் (Kural) - 789

குறள் (Kural) 789
குறள் #789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

பொருள்
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

Tamil Transliteration
Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri
Ollumvaai Oondrum Nilai.

மு.வரதராசனார்

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

சாலமன் பாப்பையா

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

கலைஞர்

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

பரிமேலழகர்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.)

புலியூர்க் கேசிகன்

‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பு (Natpu)