குறள் (Kural) - 775

குறள் (Kural) 775
குறள் #775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பொருள்
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

Tamil Transliteration
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku.

மு.வரதராசனார்

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா

பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

கலைஞர்

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

பரிமேலழகர்

விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு (Pataichcherukku)