குறள் (Kural) - 776

குறள் (Kural) 776
குறள் #776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

Tamil Transliteration
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul
Vaikkumdhan Naalai Etuththu.

மு.வரதராசனார்

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா

ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

கலைஞர்

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

பரிமேலழகர்

தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு (Pataichcherukku)