குறள் (Kural) - 774

குறள் (Kural) 774
குறள் #774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

பொருள்
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

Tamil Transliteration
Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum.

மு.வரதராசனார்

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

சாலமன் பாப்பையா

தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

கலைஞர்

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

பரிமேலழகர்

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு.

புலியூர்க் கேசிகன்

தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு (Pataichcherukku)