குறள் (Kural) - 649

குறள் (Kural) 649
குறள் #649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

Tamil Transliteration
Palasollak Kaamuruvar Mandramaa Satra
Silasollal Thetraa Thavar.

மு.வரதராசனார்

குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

சாலமன் பாப்பையா

குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

கலைஞர்

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

பரிமேலழகர்

மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை (Solvanmai)