குறள் (Kural) - 648

குறள் (Kural) 648
குறள் #648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

பொருள்
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

Tamil Transliteration
Viraindhu Thozhilketkum Gnaalam Nirandhinidhu
Solludhal Vallaarp Perin.

மு.வரதராசனார்

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

சாலமன் பாப்பையா

சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

கலைஞர்

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

பரிமேலழகர்

தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும். (தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை (Solvanmai)