குறள் (Kural) - 650

குறள் (Kural) 650
குறள் #650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

பொருள்
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

Tamil Transliteration
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar.

மு.வரதராசனார்

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

கலைஞர்

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

பரிமேலழகர்

கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)சொல்வன்மை (Solvanmai)