குறள் (Kural) - 618

குறள் (Kural) 618
குறள் #618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

பொருள்
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

Tamil Transliteration
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi.

மு.வரதராசனார்

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

கலைஞர்

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

பரிமேலழகர்

பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று -மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது ; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டியவற்றை யறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது. அறியவேண்டுவன நால்வகைவலி , காலம் , இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்தவினை செய்தவனாலும் அறியப்படாமையாலும் , பெரும்பாலும் நல்லோர் வறியநிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும் , சிலவினைகட்கு ஒரே முயற்சியும் , சிலவினைகட்குப் பலமுயற்சியும் சிலவினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும் ,ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.

மணக்குடவர்

யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)