குறள் (Kural) - 619

குறள் (Kural) 619
குறள் #619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள்
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

Tamil Transliteration
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum.

மு.வரதராசனார்

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

கலைஞர்

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

பரிமேலழகர்

தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.

மணக்குடவர்

புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

புலியூர்க் கேசிகன்

தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)