குறள் (Kural) - 617

குறள் (Kural) 617
குறள் #617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

Tamil Transliteration
Matiyulaal Maamukati Enpa Matiyilaan
Thaalulaan Thaamaraiyi Naal.

மு.வரதராசனார்

ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா

சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர்

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

பரிமேலழகர்

மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மாமுகடி மடி உளாள் -கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்; என்ப -என்று சொல்லுவர் அறிந்தோர். கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப்பாழ் என்னும் பொருளிருப்பதால் , பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி யென்றுமாம். அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத்தன்மையாலும் ,அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால் , தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப்பெயர் இன்றுதன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது. வறுமையும் செல்வமும் அமைவதை, அணிவகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக்கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று ,வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

மணக்குடவர்

வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)